Home / ஆன்மிகம் / தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்…

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்…

மேன்மை மிகுந்த மேஷ ராசி நேயர்களே!
‘துன்முகி’ வருடம் முடிந்து ‘ஹேவிளம்பி’ வருடம் தொடங்குகிறது. ஆண்டு பிறப்பதற்கு முன்பாகவே, அது நன்மையை வழங்குமா? தீமையை வழங்குமா? என்ற எண்ணம் உங்கள் மனதில் பிறந்துவிடும்.
வருடம் பிறக்கின்ற பொழுது உலாவரும் கிரக நிலைகளை, உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கிரகங்கள் சாதகமாக இருந்தால் தான் சாதனை படைக்க இயலும். இல்லையேல் சோதனை தொடர்கதையாகி விடும். வேதனை விலகவும், வெற்றிக்கனியை பறிக்கவும் இறை வழிபாடு கைகொடுக்கும்.
இந்த ஆண்டு சித்திரை மாதப்பிறப்பு வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது. சுக்ரனுடைய ஆதிக்கத்தில் பிறப்பதால் சுகங்களும், சந்தோஷங்களும் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய், குருவால் பார்க்கப்பட்டு ஆண்டு தொடங்குவது யோகம்தான். குரு- மங்கள யோகத்தின் விளைவாக மங்கள ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். மக்கள் செல்வங்களாலும் நன்மை கிடைக்கும். கசந்த காலங்களை வசந்த காலங்களாக மாற்றும் ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு.
அப்படிப்பட்ட குருபகவான், உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். அந்த இடத்தில் ஒரு சுபகிரகம் நிற்கும் பொழுது, வீண் வம்பு வழக்கு களில் இருந்து விடுபடுவீர்கள். வீண் விரயங்கள், சுபவிரயங்களாக மாறும். உரிய பணி கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். வேலை தேடுவதையே வேலையாகக் கொண்டிருந்தவர்கள், ஆண்டின் தொடக்கத்திலேயே பணியில் அமரப் போகிறீர்கள்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2,10,12 ஆகிய இடங்களில் பதிவதால், கூடுதல் பலன் கிடைக்கும். வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் இடம் புனிதமடைகிறது. எனவே குடும்பப் பிரச்சினை அகலும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட வைக்கும். பொருளாதார நிலை சீராகும். அவ்வப்போது வந்த பண வரவு, தங்கு தடையின்றி வந்து சேரும். திரும்பிய பக்கமெல்லாம் இனி வெற்றி கிடைக்கப் போகிறது. இத்தனை வருடங்களாக உழைத்தும் வீடு, வாசல் கட்டிக் குடியேற முடியவில்லையே என்று நினைத்தவர்களுக்கு, இப்போது அதற்காக வாய்ப்பு யோகம் வந்து சேரும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் நீங்கள் யோசிக்கலாம். உங்களைப் பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 10,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. என்னதான் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி இருந்தாலும், அஷ்டமத்துச் சனியின் ஆதிக்க காலத்தில் இரண்டு மடங்கு விரயங்களையும் கொடுப்பார். வீண் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.
சென்ற ஆண்டில் வந்த ஒப்பந்தங்கள் கைநழுவிப் போயிருக்கலாம். சிக்கல்களையும், சிரமங்களையும் சென்ற வருடத்தில் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் சனி வக்ரம் பெறுவது யோகம்தான். அதுமட்டுமல்லாமல் வருடக் கடைசியில் அஷ்டமத்துச் சனி விலகுவதும் அதிகளவில் நன்மையைக் கொடுக்கும்.
ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தைப் பார்க்கும் பொழுது 5-ல் ராகுவும், 11-ல் கேதுவும் இருக் கிறார்கள். அதன் விளைவாக குடும்பத்திற்குள் கோப தாபங்கள் வந்திருக்கலாம். ஆரோக்கியப் பாதிப்புகளும் அடிக்கடி ஏற்பட்டிருக்கலாம். தாயின் உடல்நலத்திற்காகவும் செலவிட்டிருப்பீர்கள். அவற்றிலிருந்து விடுபட புத சுக்ர யோகத்தின் அமைப்போடு பிறக்கும் இந்தப் புத்தாண்டில் எல்லாவிதமான நற்பலன்களையும் காணப் போகிறீர்கள்.
வருடத் தொடக்கத்தில் சனி, குரு இரண்டும் வக்ர இயக்கத்தில் இருப்பதால் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அதிகாலையில் ஆனைமுகப் பெருமானையும், உச்சிக்கால நேரத்தில் சனிபகவானையும், மாலை நேரம் அனுமனையும் வழிபட்டு வந்தால் மகத்தான பலன்கிடைக்கும்.

உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரிஷப ராசி நேயர்களே!

இனியாவது நிம்மதி கிடைக்குமா? நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகுமா?, தனவரவு திருப்தி தருமா? உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்குமா? போன்ற சந்தேகங்களில் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு விடை கூறவருகின்றது ஹேவிளம்பி புத்தாண்டு.
இந்த ஆண்டு புத்தாண்டு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்குரிய நாளான வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது. அதுமட்டுமல்லாமல் சுக்ரன் புத்தாண்டின் தொடக்க நாளில் உச்சம் பெற்று குருவாலும் பார்க்கப்படுகிறார். அப்புறமென்ன? சகல யோகத்தோடும் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள். நவக்கிரகங்கள் அனுக்கிரகமாக இருக்கும் பொழுது, நாம் நினைத்ததைச் செய்ய இயலும். அந்த அடிப்படையில் ஆண்டு தொடங்கும் பொழுதே அதிகபட்ச நன்மைகள் வரப்போகிறது.
நீங்கள் எந்தத்தொழிலைச் செய்பவராக இருந்தாலும் அது முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உங்களுக்கு இருந்த இடையூறு அகலும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் வர வாய்ப்புண்டு.
ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 5-ம் இடத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு சம வலிமையான எதிரியாக விளங்கும் குருபகவான் வக்ரம்பெறுவது யோகம் தான். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது மட்டுமல்லாமல், 9,11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன் வருவீர்கள். தொட்டது துலங்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற நீங்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சிகளும் பலன்கொடுக்கும்.
வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க குருபார்வை ஒன்றுதான் பலன் கொடுக்கும். தந்தை வழியிலிருந்த விரிசல்கள் அகன்று தக்க விதத்தில் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளை உடன்பிறப்போடு சேர்ந்து பிரித்துக்கொள்வீர்கள்.
சனி சஞ்சலம் தரும் 7-ம் இடத்தில் இருக்கின்றது. உங்கள் ராசிக்கு சனி யோகம் செய்யும் கிரகம். முடிந்த வரை அது நன்மையைத்தான் செய்யும். என்றாலும் சிலரது வீண் பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும். கண்டகச் சனி என்பதால் விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதமாகும். பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வராமல் போகலாம். பூமி வாங்கியதிலும், வீடு வாங்கியதிலும் வில்லங்கங்கள் உருவாகலாம். எனவே சனிபகவான் வழிபாடு அவசியம் தேவை.
ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தை பார்க்கும் பொழுது, சுக ஸ்தானத்தில் ராகுவும், தொழில் ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் பிறருக்கு பொறுப்பு சொல்லி உத்தரவாதம் கொடுத்தால் அதனால் பிரச்சினைகள் உருவாகும். இவற்றில் இருந்து மீள உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள ராகு-கேதுக்களின் பாதசார பலமறிந்து பரிகாரங்களைச் செய்வது நல்லது. மேலும் சனிக்கிழமை தோறும் அனுமனையும், லட்சுமி விஷ்ணுவையும் வழிபட்டு வாருங்கள். பிரதோஷ நாட்களில் விரதமிருந்து நந்தியெம்பெருமானை வழிபட்டால், நினைத்த காரியம் வெற்றியாகும். விஸ்வரூப நந்திகளைத் தேர்ந்தெடுத்து வழிபடும் பொழுது, வியக்கும் வாழ்க்கை அமையும்.

அனுபவ அறிவால் அனைவருக்கும் ஆலோசனை சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளை வழங்கும் ஆண்டாக இருக்கப் போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் சனி மற்றும் குருவின் வக்ரம் உங்களுக்கு அனைத்துப் பலன்களையும் அள்ளி வழங்கப் போகிறது. துயரங்கள் துள்ளி ஓடப்போகிறது.
துன்முகி வருடம் உங்களுக்குத் துன்பங்களைக் கொடுத்திருக்கலாம், ஆனால் ஹேவிளம்பி வருடம் இனிய பலன்களை தரும் விதத்தில் கிரக நிலையில் உன்னத மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
ராகு-கேதுக்களின் மாற்றம் வருகின்ற பொழுது, இரண்டில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அஷ்டமத்து கேதுவால் எண்ணற்ற மாற்றங்களைக் காணப்போகிறீர்கள். வரும் மாற்றம் வளம் சேர்க்கும் மாற்றமாக அமைய, வருட தொடக்கத்திலேயே சர்ப்ப தெய்வ வழிபாடுகள் மற்றும் சிறப்புப் பரிகாரங்களை செய்துவிடுங்கள்.
ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிதுன ராசிக்காரர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய தெசாபுத்திக்கேற்ற வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது.
இந்த ஆண்டு சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. உங்கள் ராசி நாதன் புதனுக்கு சுக்ரன் நட்புக் கிரகமாவார். சுக்ரனுக்குரிய கிழமை வெள்ளிக் கிழமை என்பதால், ஆண்டின் தொடக்க நாளே அனுகூலமான நாளாக அமையப்போகிறது. வேண்டிய வரங்கள் கிடைக்கும். விரும்பும் காரியங்கள் விரைவில் நடைபெறும். நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக் கிறார். அவரது பார்வை 8,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. குரு- சுக்ரப் பார்வையும், சனி – செவ்வாய் பார்வையும் இருந்தாலும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் பொழுது இழப்புகளையெல்லாம் ஈடுசெய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
தொழில் மாற்றங்களை எதிர்பார்த்த படியே கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு மிகுந்த நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. பெற்றோரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் முடிவுக்கு வரும்.
6-ல் சனி இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். 8,9 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி. அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வைர வரிகளுக்கு ஏற்ப ராஜயோக வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கும், அலுவலகங்களில் இருப்பவர்களுக்கும் தலைமைப் பதவி ஏற்படலாம்.
வெற்றிக்குரிய விதத்தில் இந்த ஆண்டை அமைத்துக் கொடுக்கும் சனிபகவானை, நீங்கள் விரும்பி வழிபாடு செய்ய வேண்டும். வன்னி மரத்தடி சனிபகவானை தேடிச்சென்று வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். எனவே முன்னேற்றத்தில் தடை ஏற்படாமல் இருக்கவும், முக்கியமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவும் ராகு-கேதுக் களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை யோக பலம் பெற்ற நாளில் செய்யுங்கள். குரு வாரத்தில் தட்சிணாமூர்த்தியையும், சனி வாரத்தில் ஆதியந்தபிரபுவையும் வழிபட்டால் சோதனைகள் சாதனைகளாக மாறும்.

நட்பும், பகையும் மாறி மாறி வந்தும் நம்பிக்கையோடு பணிபுரியும் கடக ராசி நேயர்களே!

2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமைய, சனி பகவான் 5-ல் வக்ரம் பெற்றிருக்க, சுப கிரகம் எனப்படும் குரு பகவான் 3-ல் வக்ரம் பெற, உச்சம் பெற்ற சுக்ரனின் ஆதிக்க நாளான வெள்ளிக் கிழமையில் ஹேவிளம்பி புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே நடக்கப்போகும் பலன் களைப் பற்றி அசை போட்டுப் பார்ப்பீர்கள்.
சென்ற ஆண்டு குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் ஒருசில காரியங்களில் தடைகளும், தாமதங்களும் வந்திருக்கலாம். ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு மருத்துவச் செலவு அதிகரித்திருக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று சம்பாதிக்க முயற்சிகள் செய்தும், கடைசி நேரத்தில் அது கைநழுவி சென்றிருக்கலாம்.
அந்த நிலை இப்பொழுது மாறும். உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருபகவான் 3-ம் இடத்தில் இருந்து கொண்டு 7,9,11 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். தேவ குருவின் பார்வை பட்டாலே யோகம் என்பார்கள். அந்த அடிப்படையில் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி வருடத் தொடக்கத்தில் நிகழவிருக்கிறது.
2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் ஆரம்பத்தில் உலா வருவதால் உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க முடியாமல் அவதிப் படுவர். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைவால் இடமாற்றம், ஊர்மாற்றம் இலாகா மாற்றங்கள் உருவாகலாம்.
அஷ்டமத்து கேதுவால் அலைச்சல் அதிகரிக்குமே தவிர, ஆதாயம் இருக்காது. பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாறலாம். எதிர் காலத்தைப் பற்றிய ஏக்கம் அதிகரிக்கும்.
3,12-க்கு அதிபதியான புதன் நீச்சம் பெற்றிருப்பது ஒரு வழிக்கு நன்மைதான். புதனும், வியாழனும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். சகாய ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெறும் புதனின் பலத்தால், மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவு பலப்படும். தொழில் வளர்ச்சியில் அவர் களது பங்கும் சேரும். புத சுக்ர யோகத்தில் விளைவாக பூமியோகம் உங்களுக்கு உண்டு. பூர்வீகச் சொத்து அல்லது புதிதாக வாங்கிய சொத்தை விற்று அதன் மூலம் ஒரு பெரும் தொகை கைக்கு கிடைக்கும். அதைப் புதிய தொழிலுக்கான மூலதனமாகவும் வைத்துக் கொள்வீர்கள்.
சனி உங்கள் ராசிக்கு 7,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அவர் ஆண்டின் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருப்பதால், குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமலிருக்க சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஆடி 11-ந் தேதிக்கு மேல் வரும் ராகு-கேது பெயர்ச்சி சர்ப்ப தோஷத்தை உருவாகப் போவதால், அதற்கு முன்னதாகவே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்வது நல்லது.

எந்த வேலையும் அரைகுறையாக நிற்கக் கூடாது என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்தாண்டு வரப்போகிறது. அதுவும் அள்ளிக் கொடுக்கும் வெள்ளிக்கிழமையில் ஹேவிளம்பி ஆண்டு பிறக் கிறது. உங்கள் சிந்தனைகள் அனைத்தும் செயல்பட்டு வெற்றி காண ஆடி பதினொன்று வரை பொறுத்திருப்பது நல்லது.
ஏனெனில் அன்று தான் ராகு-கேதுக்களின் பெயர்ச்சி நடைபெறப் போகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருந்து கொண்டு மனக் கவலையையும், பணக்கவலையையும் கொடுத்திருக்கலாம். இனத்தார் பகை, எடுத்த காரியங் களில் எதிர்ப்பு, கனத்த மனதோடு வாழும் சூழ்நிலை, குடும்பத்தில் விரிசல் போன்றவை ஏற்பட்டிருக்கலாம். அத்தனையும் மாறப் போகிறது.
இந்த அசுர கிரகங்களின் பெயர்ச்சியால் முத்தான பெயர்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாகவே உங்கள் சுய ஜாதகத்திற்கு அனுகூலம் தரும் நாளில், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாகச்செய்து கொண்டால் சந்தோஷத்தின் எல்லைக்கே செல்லலாம்.
வருடத் தொடக்கத்தில் குருவும், புதனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். தன லாபாதிபதியான புதனும், பஞ்சம அஷ்டமாதிபதியான குருவும் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை பெறுவது ஒரு வழிக்கு யோகம்தான். பொருளாதாரச் சிக்கல்கள் அகலும். சங்கடமான சூழ்நிலைகள் மாறி சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். நீங்கள் திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள்.
குரு பகவான் வருடத் தொடக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புத்திர ஸ்தா னாதிபதி குரு 2-ல் இருப்பதால் பிள்ளைகளாலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும். வாரிசுகளுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து அதன் மூலம் நல்ல வருமானம் ஏற்படும்.
குருவின் பார்வை வருடத் தொடக்கத்தில் 6,8,10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வட்டி கட்டி வாழ்ந்து வந்த நீங்கள், இனி பெட்டிகளில் பணத்தை அடுக்கி வைக்கும் சூழல் உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட அனைத்து விதமான நோய்களும் புதிய மருத்துவரின் சந்திப்பால் விலகி ஓடும். ஒரு சிலர் வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு, சுயதொழில் தொடங்க முன்வருவர்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வக்ர இயக்கத்தில் இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். இந்த நேரத்தில் எதிரிகளின் பலம் குறையும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் தானாக நடைபெறும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்றினத்தவர்கள் முன்வருவர்.
6-க்கு அதிபதி வக்ரம்பெறும் பொழுது, உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அரசுப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அது கை கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். தொழில் போட்டிகள் அகலும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அரைகுறையாக நின்ற சில பணிகளை முடிப்பீர்கள். தொழிலை விரிபடுத்தும் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறும்.
வருடத் தொடக்கத்தில் செவ்வாய் தோறும் துர்க்கையை வழிபடுவது நல்லது. வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடுங்கள். எல்லா வற்றிற்கும் மேலாக ராசிநாதன் சூரியனுக்குரிய தெய்வத்தை நீங்கள் முறையாக வழிபட்டாலே வளர்ச்சியின் உச்சத்திற்கு செல்லலாம்.

எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!

ஹேவிளம்பி வருடம் உங்களுக்குப் புதிய திருப்பங்களையும், பொன்னான எதிர்காலத்தையும் வழங்கப் போகிறது. இந்த ஆண்டிலாவது சொத்துகள் வாங்கும் யோகம் உண்டா?, சொந்த பந்தங் களின் ஒத்துழைப்பு கிடைக்குமா?, மங்கள ஓசை மனையில் கேட்குமா? என்ற உங்களின் சிந்தனைகளுக்கு விடைகூறும் விதத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது.
வரப்போகும் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் பிறப்பது யோகம்தான். சுக்ரனுக்குரிய நாளில் பிறக்கிறது. சுக்ரன் உங்கள் ராசிக்கு 2,9-க்கு அதிபதி. அவர் உச்சம் பெற்று, குருவால் பார்க்கப்படு கிறார். அதுமட்டுமல்லாமல் ராசிநாதன் குருவும், புதனும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். யோகங்களில் சிறப்பான யோகமாகக் கருதப்படுவது பரிவர்த்தனை யோகமாகும். அதுவும் சப்தம ஸ்தானத்தில் பரிவர்த்தனை பெறுவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
மங்கள நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். வீடுகட்டிக் குடியேறும் வாய்ப்பும், வேண்டிய அளவிற்கு பொருளாதார நிலை உயரும் அமைப்பும் ஒருவருக்கு வாய்க்க வேண்டுமானால் குரு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்க வேண்டும். அந்த அமைப்பு இந்த ஆண்டு உங்களுக்கு உருவாகப் போகிறது. எனவே ஆவணிக்கு மேல் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
இந்த ஆண்டு ராகு-கேதுக்களின் மாற்றமும், சனியின் மாற்றமும் நிகழவிருக்கின்றது. மாபெரும் கிரகங்களின் மாற்றம் நிகழும் பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களும், ஏற்றங் களும் வந்துகொண்டே இருக்கும். ஏற்றங்கள் வரும்பொழுது ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்றம் வரும் பொழுது சுயஜாதகத்தின் பலம் நன்றாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.
குருவின் பார்வை 5,7,9 ஆகிய இடங்களில் ஆண்டின் தொடக்கத்தில் பதிகிறது. எனவே பார்க்கும் குருவால் உங்களுக்குப் பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி திட்டங்களைத் தீட்டுவீர்கள். அந்தத் திட்டங்களை வெற்றி பெறவைக்கும் பொறுப்பு குருவின் கையில் இருக்கிறது. எனவே பிள்ளைகளின் கல்வி நலன் கருதியோ, கடல்தாண்டும் வாய்ப்பு கருதியோ, கல்யாணம் செய்வது பற்றியோ சிந்தித்தால் அது நல்ல விதமாக முடியும்.
பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும், இப்பொழுது கிடைக்கப் போகிறது. முன்னோர் சொத்து களை முறையாக பங்கீடு செய்து கொள்வீர்கள். அண்ணன், தம்பிகளின் அனுசரிப்பு இதமளிக்கும். பெற்றோர் வழியிலும், உற்றார், உறவினர்கள் வழியிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். அரசாங்கப் பதவிகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் மனதில் இடம்பிடிப்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நேரமிது.
ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தைப் பார்க்கும் பொழுது 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்களின் பயணங்களை அதிகரிக்க வைக்கலாம். வெளிநாட்டுப் பயணங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் பயணங்கள் செல்லத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு அது கைகூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வழக்குகள் சாதகமாக முடிந்து மீண்டும் பதவியில் சேரும் யோகம் உருவாகலாம்.
கேதுவின் பலத்தால் பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உறவினர்களின் மனக்கசப்புகள் மாறும். வீண் பழிச்சொல் அகலும். சனியின் ஆதிக்கம் 3-ல் இருப்பது ஒருவழிக்கு நன்மைதான். சகோதர வர்க்கத்தினரால் சகாயம் கிடைக்கும். செய்யும் தொழிலில் உடன் பிறப்புகளை கூட்டு சேர்த்துக் கொண்டிருப்பவர்கள் ஆதாயம் காண்பார்கள். இதுவரை தொழிலில் இருந்து விலகிக் கொள்வதாகச் சொன்ன உடன்பிறப்புகள், இப்பொழுது விலக மறுப்பர்.
வருடத் தொடக்கத்தில் குருவிற்குரிய பரி காரங்களை முறையாகச் செய்வது நல்லது. வியாழன் விரதமும், திசைமாறிய தென்முகக்கடவுள் வழிபாடும் உங்களுக்கு நன்மையை வழங்கும். அதுமட்டுமல்லாமல் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்களுக்கு அனுகூலமான நாளில் குருவிற்குரிய பரிகாரங்களையும், ராகு-கேது பெயர்ச்சிக்கு முன்னால் சர்ப்பக் கிரக பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.

எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கும் நாளிலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருக்கிறார். அவரைப் பரிவர்த்தனை யோகம்பெற்ற குரு பகவான் பார்க் கிறார். துவளாத மனதிற்கு சொந்தக்காரரான உங்களுக்கு, தொடர்ந்து நல்ல வாய்ப்புகளையே உலாவரும் கிரகங்கள் வழங்கப் போகின்றன.
இந்த புத்தாண்டிலாவது கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகுமா?, உடன் இருப்பவர்களால் நன்மை கிட்டுமா? படிப்படியாக வந்த முன்னேற்றம் பாதியில் நிற்கிறதே, ஏழரைச் சனி எப்பொழுதுதான் விலகும் என்ற உங்களின் எண்ணங்களுக்கு இந்த விரைவில் விடை கிடைக்கப்போகிறது. விலகும் சனியால் உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறை வேறப் போகிறது. அரைகுறையாக இருந்த பணி களெல்லாம் அடுக்கடுக்காக நடைபெறும். முடக்கப்பட்டிருந்த பணிகள் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். அலட்சியம் செய்தவர்கள் கூட இனி ஆதரவு தருவர். விலகப்போகும் சனியை முன்னதாகவே சென்று வழிபட்டு வரவேண்டும்.
அளவில்லாச் செல்வம் தரும் சனிபகவான், உங்கள் ராசிக்கு யோகம் செய்பவர். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு நட்பு கிரகம் அவர். எனவே இந்த ஆண்டு எல்லா வளங்களையும் உங்களுக்கு கொடுக்கப் போகிறது.
குருவின் நிலைமையைப் பார்க்கும்பொழுது, வருடத் தொடக்கத்தில் 12-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3,6-க்கு அதிபதியானவர் சனி. அவர் 12-ல் சஞ்சரிக்கும் பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப விபரீத ராஜயோகத்தை வழங்கப் போகிறார். அதன் விளைவாகத் திடீர் மாற்றமும், திரவிய லாபமும் கிடைக்கும்.
குருவின் பார்வை 4,6,8 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே தாய்வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் விலகும். கடந்த ஏழரை ஆண்டு காலமாக எதிர்ப்புக்கு மத்தியில் வாழ்ந்த நீங்கள், இனி மதிப்பும், மரியாதையும் பெறப் போகிறீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று மகிழ்ச்சி காணப்போகிறீர்கள்.
தொடர்ந்து நோயின் பிடியில் சிக்கி தேய்மான எலும்புகளாலும் சிறு சிறு தொல்லைகளாலும் அவதிப்பட்ட உங்களுக்கு, இனி விடிவு காலம் பிறக்கப் போகிறது. தக்க விதத்தில் மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டு ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள். மிக்க புகழைப் பெற்ற ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து, நீங்கள் செய்யும் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பார். உத்தியோகத்தில் உன்னத நிலையை அடையும் வாய்ப்பு கைகூடிவரும்.
ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தால் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வெளிநாட்டு அனுகூலம் கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்கு லாபம் வரலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கள் வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு தனித்தியங்க முற்படுவர். சுயதொழில் செய்ய நினைப்பவர்கள், சுயஜாதகம் பலம் பெற்றிருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். யோகதிசை நடந்தால் தொடங்கும் தொழில் லாபகரமாக இருக்கும்.
கேதுவின் ஆதிக்கம் 5-ல் இருப்பதால் பூர்வீகச் சொத்துகளால் பிரச்சினைகள் உருவாகலாம். அண்ணன், தம்பிகளுக்குள் மனக்கசப்பு வரலாம். பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கும். பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.
சனிப் பெயர்ச்சியின் விளைவால் சந்தோஷங்கள் வந்து சேரப்போகிறது. தற்சமயம் வருடத் தொடக்கத்தில் விருச்சிகத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிக்கப் போகிறீர்கள். சனி, குரு மற்றும் ராகு-கேதுக்களுக்கு உரிய பரிகாரங் களைச் செய்து கொள்வதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

விடாமுயற்சியால் விரைவில் வி.ஐ.பியாக மாறும் விருச்சிக ராசி நேயர்களே!

ஹேவிளம்பி ஆண்டு உங்களுக்கு பொன் கொழிக்கும் ஆண்டாக அமையப் போகிறது. வெற்றிகளைக் குவிக்கும் விதத்தில் கிரக நிலைகள் உலாவருகின்றன. தன பஞ்சமாதிபதியான குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் லாபாதிபதி புதனோடு இணைந்து பரிவர்த்தனை யோகம் பெறுகிறார். யோகங்களில் சிறந்தது பரிவர்த்தனை யோகமாகும். அந்த அடிப்படையில் வருடத் தொடக்கமே உங்களுக்கு வசந்தமாக அமைகிறது.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வார்கள். தக்க விதத்தில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொன்னான வாய்ப்புகளும், புதிய ஒப்பந்தங்களும் வரத்தொடங்கும்.
ஆண்டின் தொடக்க நாள் வெள்ளிக்கிழமையில் மலர்கின்றது. வெள்ளிக்கிழமை என்பது சுக்ர வாரமாகும். அந்தச் சுக்ரன் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படுகிறார். எனவே, உச்சம் பெற்ற சுக்ரனின் ஆதிக்கத்தால் மிச்சம் வைக்கும் அளவிற்கு பொருளாதாரநிலை உயரப் போகிறது.
சனி விலகும் ஆண்டு என்பதால் தேக நலன் சீராகும். திட்டமிட்ட காரியத்தைத் திட்டமிட்ட படியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3,5,7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மிக்க உங்களுக்குத் தெய்வங்களின் துணை பக்கபலமாகவே இருக்கும்.
குருவின் பார்வை பலத்தால் பூர்வீகச் சொத்துகளில் லாபம் கிடைக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் யோகம் உண்டு. மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி கள் தென்படும். புத்தி சாதுரியத்தால் புகழ் பெறுவீர்கள். திசை எட்டும் உங்கள் புகழ் பரவும் விதத்தில் குருவின் சஞ்சாரம் அமைகிறது. அரசுவழி அனுகூலங்களும், ராஜயோகமும் வந்து சேரும்.
ராகு-கேதுக்களின் ஆதிக்கம் ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் ராகு 10-ம் இடத்திலும், கேது 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். 10-ம் இடத்து ராகு முத்தான தொழிலை அமைத்துக் கொடுக்கும். பணியாளர்களின் தொல்லை அகலும். ஏற்றமும், மாற்றமும் இனியதாகவே வந்து சேரும். தேக்க நிலை மாறி ஊக்கத்தோடு செயல்புரிந்து உயர்வைக் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தன்னம்பிக்கையும், துணிவும் உங்களுக்கு தக்க விதத்தில் பலன் தரும். 4-ல் உள்ள கேதுவால் பிறர் வியக்குமளவு வீடு கட்டும் வாய்ப்பு உருவாகும்.
சனிபகவான் இந்த ஆண்டு உங்கள் ராசியில் இருந்து விலகி தனுசு ராசிக்குச் செல்லப் போகிறார். ஜென்மச் சனி விலகும் ஆண்டு என்பதால், செயல்பாடுகளில் எல்லாம் வெற்றி கிடைக்கப் போகிறது. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். என்றைக்கோ நீங்கள் கொடுத்த தொகை இப்பொழுது வந்து சேரும். வருடத் தொடக்கத்தில் சனி வக்ரம் பெறுவது மிகுந்த யோகமாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். மருத்துவச் செலவு குறையும்.
புத்தாண்டில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகி வர்த்தகத் துறையில் முதன்மை பெறுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சொந்த, பந்தங்கள் ஆச்சரியப்படப் போகிறார்கள்.
ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது. ராசிநாதன் செவ்வாய் பலம் பெற ஆனைமுகப் பெருமானை வழிபட வேண்டும். ராகு-கேதுக் களின் ஆதிக்கம் யோக வாய்ப்புகளை வர வழைத்துக் கொடுக்க அனுகூலமான ஸ்தலத்தில் நாகசாந்திப் பரிகாரம் செய்வது நல்லது. மேலும் பவுர்ணமி கிரிவலம் வருவதன் மூலம் நிலவு வழிபாட்டால் நிம்மதி காண இயலும்.

லட்சியங்களை நிறைவேற்றுவதிலேயே குறிக்கோளாக இருக்கும் தனுசு ராசி நேயர்களே!

புத்தாண்டு நெருங்கிவிட்டது. புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் உங்களுக்கு, முத்தான வாழ்க்கையைக் கிரக நிலைகள் கொடுக்குமா? முறையற்ற செலவுகளால் ஏற்பட்ட விரயங்களைத் தீர்க்கப் போதுமான வரவு வந்து சேருமா? ஜென்மச் சனியால் உடல் நலம் எப்படி இருக்கும்? திடீர் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஏற்படுமா? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் சிந்தனைக்குத் தெளிவான விடையைக் கிரகங்கள் எடுத்துரைக்கப்போகின்றன.
வருடத் தொடக்கத்தில் விரயச் சனியின் ஆதிக் கம் மேலோங்கி இருக்கிறது. இருப்பினும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே செலவுகளைக் கொடுத்தாலும், தக்க விதத்தில் வரவுகளையும் தந்துவிடுவார். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட் களையும் வாங்குவதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியும், உடன்பிறப்புகளின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிவைக்கவும் ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2,3 ஆகிய இடங்களுக்கு அதிபதி. இப்பொழுது ஏழரைச் சனியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரயச்சனியின் இரண்டரை ஆண்டு காலம் முடிந்து, இந்த ஆண்டு ஜென்மச் சனியின் ஆதிக்கம் தொடங்கப் போகிறது. 10-ல் சஞ்சரித்து வந்த குரு, 11-ல் சஞ்சரிக்கப் போகிறார். ஆனால் அதே நேரத்தில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சி உங்களுக்கு கொஞ்சம் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் கொடுக்கும் விதத்திலேயே உள்ளது.
2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் வரப்போவதால் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், வாய்ப்புகள் கைநழுவிச் செல்லாமல் இருக்கவும் முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. ஏழரைச் சனியில் முதல் சுற்றும், மூன்றாம் சுற்றும் நடப்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். 2-வது சுற்று சனி ஆதிக்கம் இருப்பவர்கள் ஓரளவு நற்பலன் களைப் பெறுவர்.
வருடத் தொடக்கத்தில் 10-ல் குருபகவான் சஞ்சரிப்பதால், முத்தான தொழிலில் ஏற்படும் முட்டுக் கட்டைகளை அகற்றிக் கொள்ள முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் சில பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உண்டு. அவற்றை நீங்கள் பொருட்படுத்தாமல் மேலதிகாரிகளின் அன்பிற்குப் பாத்திரமாவது நல்லது. அதே நேரத்தில் குருவின் பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் குரு என்பதால், அதன் பார்வைக்கு பலன் கூடுதலாகக் கிடைக்கும். வருடத் தொடக்கத்தில் குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. ஆதாயம் தரும் தகவல் அதிகமாகவே வந்து சேரும். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து பலன் பெற்றவர்கள் வீடு தேடி வந்து வாழ்த்துவர்.
தாய், தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். இதுவரை உங்கள் மீது பாசம் காட்டாத பெற்றோர், இப்பொழுது பாசம் காட்டுவர். மற்ற சகோதரர் களுக்கு கொடுக்கும் மதிப்பு உங்களுக்கு கொடுக்கவில்லையே என்று ஏங்கிய நிலை இனி மாறும். வாங்கல்- கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். கட்டிய வீட்டைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். அதற்கான செலவை முன்னிட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு கடன் உதவிகள் கிடைக்கும். ஜீவன ஸ்தானம் பலம்பெறுவதால் உத்தியோகப் பாதிப்புகள் ஏற்படாது.
வருடத் தொடக்கத்தில் விரயச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. பணவரவு சீராக இருந்தாலும் செலவுகள் இருமடங்காக இருக்கலாம். செய்தொழிலைத் திட்டமிட்டு செய்தால் ஓரளவேணும் சேமிக்க இயலும். கூட்டாளி களைச் சேர்த்துக் கொள்பவர்கள், அவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்களா? என்பதை ஆராய்ந்து பார்த்து தேர்வு செய்வது நல்லது. வாகனங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.
வருடத் தொடக்கத்தில் 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் இருக்கிறார்கள். எனவே சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் இழுத்தடிக்கலாம். பங்காளி பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
பொதுவாக ராசிநாதன் குரு மற்றும் தனாதிபதி, சகாய ஸ்தானாதிபதியாக விளங்கும் சனிக்குரிய பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபாடு செய்தால் நன்மைகளை வழங்கும். சனிகவசம் பாடி சனி பகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றுவது நல்லது.

நம்பிக்கையை நண்பர்கள் மீது அதிகம் வைத்திருக்கும் மகர ராசி நேயர்களே!

ஹேவிளம்பி வருடம் பிறக்கும் பொழுதே குருவின் பார்வையோடும், சனியின் பார்வையோடும் பிறக்கிறது. மேற்கண்ட இரண்டு கிரகங்களும் உங்கள் ராசியை வக்ர இயக்கத்தோடு பார்க்கின்றன. இருப்பினும் குரு விரயாதிபதியாகவும், சகோதர ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால் உடன் பிறப்புகளின் வழியே விரயங்கள் ஏற்படும். அதே நேரத்தில் சனி பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும்.
முன்பு வந்த நோய் மீண்டும் தலைதூக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க நினைக்கும் போது, உடல்நலம் ஒத்துழைப்புத் தர மறுக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். என்ன இருந்தாலும் ஆண்டு தொடங்கும் பொழுதே எண்ணற்ற சிந்தனைகள் இதயத்தில் இடம் பிடிக்கும். அவற்றிற்கெல்லாம் பதில் கூறும் விதத்தில் ஹேவிளம்பி ஆண்டு பிறக்கிறது.
வருடத்தின் தொடக்க நாள் வெள்ளிக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை சுக்ர வாரம் என்று அழைக்கப்படும். அந்த சுக்ரன் உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதி. அவர் உச்சம் பெற்று 6-க்கு அதிபதி புதனோடு சேர்ந்து வக்ர வியாழனால் பார்க்கப்படுகிறார். இந்த குரு- சுக்ர பார்வையின் விளைவாக குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். குழப்பங்கள் கூடுதலாக இருக்கும். உடன்பிறப்புகளின் வாக்குவாதங்கள் உங்கள் உள்ளத்தை வாட்டும். கடன்சுமை ஒருபுறம் தீர்ந்தாலும் புதிய கடன்கள் உருவாகும்.
8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அதிலும் சூரியன் வீட்டில் இருக்கும் ராகுவால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். நண்பர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. முதலீடு செய்த அளவிற்கு லாபம் வரவில்லையே என்று நினைப்பீர்கள். சாதாரண சிகிச்சைக்குச் சென்று, அது ரண சிகிச்சையாக முடியும். மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். முயற்சியில் முழு கவனம் செலுத்தினால்தான் வெற்றி தேடி வரும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களால் தொல்லைகள் உருவாகும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும். வீண் பழிகளுக்கு ஆளாகாமல் இருக்க அதிக விழிப்புணர்ச்சி தேவை. உச்சரிக்கும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.
2-ல் கேது இருக்கும் பொழுது நீங்கள் எதைச் சொன்னாலும் மற்றவர்களுக்கு அது குற்றமாகத் தெரியும். உறவினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் கூட அது திருப்தியளிக்காது. ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள் உருவாகலாம். சுய ஜாதகத்தின் பலனைப் பொறுத்தே நீங்கள் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் செல்லும் இடங்களில் ஏமாற்றமே மிஞ்சும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் திருப்திப்படுத்த இயலாது. என்றாலும் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.
விலை மதிப்பு அதிகம் உள்ள பொருட்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் உள்ள மின்சாதனங்களும், அதிக விலைகொடுத்து வாங்கிய பொருட்களும் அடிக்கடி பழுதாகி உள்ளத்தை வாட்டும். ஆடி 11-ந் தேதி வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அதன்பிறகும் கூட ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே தொடர்ந்து வரும் இந்த சர்ப்ப தோஷத்தின் விளைவால் சந்தோஷ வாய்ப்புகள் குறையலாம்.
எனவே இதுபோன்ற காலங்களில் செவ்வாய் தோறும் துர்க்கை வழிபாடும், சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் உங்கள் ஜாதகப்படி யோக பலம்பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களை அனுகூல ஸ்தலங்களில் செய்தால் நல்ல பலன்கள் நாடி வந்து சேரும்.
குருவின் பார்வை உங்கள் ராசியிலும் மற்றும் 3,5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. ராசியில் குருவின் பார்வை பதிவதால், மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் என்றே சொல்லலாம். தேக்கநிலையில் தெளிவு பிறந்து திட்டமிட்ட காரியத்தை திருப்திகரமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். செவ்வாய், சனி பார்வை வருடத் தொடக்கத்தில் உள்ளதால் பிரித்து கொண்ட சொத்துகளில் பிரச்சினைகள் வரலாம். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது நல்ல விலைக்கு விற்கும். முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அதுமட்டு மல்லாமல் சங்கடங்கள் விலக சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.

கேது மாற்றம் நன்மை தரும்! கேட்ட உதவிகள் கிடைத்து விடும்! ஆற்றல் பெற்ற கும்ப ராசி நேயர்களே!

ஹேவிளம்பி ஆண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டு பிறப்பது உங்கள் ராசிநாதனான சனிபகவானுக்கு நட்பு கிரகமாக விளங்கும் சுக்ரனுக்குரிய நாளான வெள்ளிக்கிழமை ஆகும். எனவே இந்தப் புத்தாண்டு உங்களுக்கு புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். தேவைக்கு ஏற்ற அளவு வருமானமும் தித்திப்பான தகவல்களும் வந்து கொண்டே இருக்கும்.
வருடம் பிறப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அசைபோட்டுப் பார்ப்பீர்கள். புத்தாண்டு நமக்கு எப்படியிருக்கும்?, புதிய வாய்ப்புகளை வர வழைத்துக் கொடுக்குமா? சுற்றிவரும் கோள்களில் ராகு, கேது மற்றும் சனி, குரு ஆகிய அனைத்தும் பெயர்ச்சியாகப் போகின்றதே அந்த மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சியால் மனநிம்மதி நமக்குக் கிடைக்குமா?, பணவரவு திருப்திகரமாக இருக்குமா? என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் ஈடேற வழிவகுத்துக் கொடுக்கப்போகின்றது இந்தப் புத்தாண்டு.
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே போல உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியாக விளங்கும் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இந்த இரண்டு பேரின் வக்ர இயக்கத்தால், திடீர் விரயங்களும் தேவைக்கேற்ற பணமும் வந்து கொண்டே இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து, வளர்ச்சி கூட வழிவகுத்துக் கொடுப்பர்.
அஷ்டமத்துக் குருவின் ஆதிக்கம் அவ்வளவு நல்லதல்ல. தடைகள் அதிகரிக்கும். மளமளவென்று நடந்த காரியங்கள் அப்படியே நிற்கலாம். அசையாச் சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பாம்புக் கிரகங்கள் ஆடி 11-ல் விலகிய பிறகு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து அலை மோதும். துரத்தி வந்த துன்பங்கள் விலகி ஓடும்.
என்ன இருந்தாலும் ஆண்டின் தொடக்கத்தில் சனி, குரு, ராகு, கேது ஆகியவற்றிற்குரிய பரிகாரங்களை, அதற்கு உகந்த ஸ்தலங்களுக்குச் சென்று செய்து கொள்வது நல்லது. தொடக்கத்தில் குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் இடத்தைக் குறிப்பிடும் குடும்ப ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், இல்லத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். இழந்தவற்றை மீண்டும் பெறுவீர்கள். தட்டுப்பாடுகள் அகலும். பிரிந்து சென்ற உறவினர்கள், மீண்டும் வந்திணைய வாய்ப்பு ஏற்படும்.
கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப் பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்பை ஒருசில சமயங்களில் தளர்த்திக் கொள்ள நேரிடும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண்பழிகள் மாறும். மேலதிகாரிகள் உங்கள் திறமையை அறிந்து பொறுப்புகளைக் கொடுப்பார்கள். தாய்வழி பிரச்சினை அகலும். அசையாச் சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அண்டை நாடுகளில் இருந்துவரும் அழைப்புகள் ஆனந்தம் வழங்கும்.
வருடத் தொடக்கத்தில் சனிபகவான் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். முத்தான தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். பங்குதாரர்களின் ஜாதகத்தை உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து சஸ்டாஸ்டம தோஷம் இல்லையா, என்று தெரிந்து சேர்த்துக் கொள்வது நல்லது. யோக ஜாதகங்களை கூட்டாகச் சேர்த்துக் கொண்டால், யோகங்கள் வந்து சேரும்.
ஆண்டின் தொடக்கத்தில் புத-சுக்ர யோகமும், பரிவர்த்தனை யோகமும், சனி, செவ்வாய் பார்வையும் உள்ளது. சனியைச் செவ்வாய் பார்ப்பதால் மனப் போராட்டம் அதிகரிக்கும். குருவின் பார்வை செவ்வாய் மீது பதிவதால் மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். பல மாதங்களாக தள்ளிப்போன பதவி கிடைக்கலாம்.
பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானையும், செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய துர்க்கையையும் வழிபாடு செய்யுங்கள். ஆடி 11-ந் தேதிக்குள் ராகு கேதுக்களுக்குரிய சிறப்பு பரிகாரங்களைச் செய்து கொண்டால் தான் இல்லத்தில் உள்ள பூசல்கள் மறையும். இல்லறம் நல்லறமாக மாறும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். நிதி நெருக்கடி அகன்று நிம்மதி கிடைக்கும்.

விமர்சனங்களுக்கு பயப்படாமல் வெளிப் படையாக பேசும் மீன ராசி நேயர்களே!

துன்முகி வருடம் முடிந்து ஹேவிளம்பி புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே குருப்பெயர்ச்சி வரை உங்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கப் போகிறது. அதன் அருட்பார்வையால் அனைத்துக் காரியங் களிலும் உங்களுக்கு வெற்றியை வழங்கும்.
ராசிநாதனாக விளங்கும் குரு வக்ரம் பெற்று சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். கேந்திராதிபத்ய யோகம் பெற்ற கிரகங்கள் இப்படி வலிமையிழக்கும் பொழுது, மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ அவற்றை ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க வாய்ப்புகள் கைகூடிவரும். உடல்நலப் பாதிப்புகள் அகலும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும்.
தடைகளை முறியடிப்பது குருவின் பார்வை பலம்தான். அந்த குரு புதன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். எனவே உறவில் ஏற்பட்ட விரிசல்கள் அகலும். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசியவர்கள் உங்களை விட்டு விலகுவர். வருத்தெடுத்த துன்பங்கள் வந்த வழியே திரும்பிச் செல்லும். விவாகத்தால் ஏற்பட்ட விவகாரங்கள் விலகும்.
உத்தியோகத்தில் ஏற்பட்ட தொல்லைகள், வீண் பழி அகலும். மேலிடத்தில் உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். தொட்டது துலங்கும். இந்த நேரத்தில் 6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் அமர்ந்திருப்பது ஒருவழிக்கு யோகம்தான். ஆண்டின் தொடக்கத்திலேயே அஷ்டலட்சுமி யோகம் செயல்படப் போகிறது. வேண்டிய நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடும்.
ஏற்றமும், மாற்றமும் வந்து கொண்டேயிருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்கையும் காப்பாற்றுவீர்கள். குருவின் பார்வை ஜென்ம ராசியிலும், 3,11 ஆகிய இடங்களிலும் பதிவதால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடம் மாறிச் சென்ற உடன்பிறப்புகள் தானாக வந்து சேருவர்.
துணிந்து எடுத்த முடிவுகளால் துயரங்களில்இருந்து விடுபடுவீர்கள். பணிந்து வணங்கும் தெய்வங்கள் உங்களுக்கு பக்கத் துணையாக இருக்கும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்வீர்கள். எதிரிகள் ஸ்தானம் வலுவிழக்கும் இந்த நேரத்தில், புதிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள்.
பதவியில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்விற்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். உத்தி யோகம் சம்பந்தமாக வெளிநாடுகளில் இருந்தும் கூட உங்களுக்கு அழைப்புகள் வரலாம். திசாபுத்தி பலம்பெற்றிருந்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒருசிலருக்கு மனதிற்கு உகந்த இடத்திற்கு இடமாறுதல் கிடைக்கும்.
வருடத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில், வக்ர இயக்கத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். லாபாதி பதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. உங்களுக்கு லாபத்தையும் கொடுத்து, அதற்கேற்ப விரயத்தையும் கொடுக்கும் பொறுப்பு அவரிடம் உள்ளது. எனவே புதிய வாய்ப்புகளும், புதிய ஒப்பந்தங்களும் வருடத் தொடக்கத்தில் வந்து சேரும். மண், பூமி வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தாமதப்பட்ட காரியங்கள் எல்லாம் தடையின்றி நடைபெறும். சேமிப்பு உயரும்.
ஆண்டின் தொடக்கத்தில் 6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் இருக்கிறார்கள். அஷ்டலட்சுமி யோகத்தின் விளைவாக நற்பலன்கள் உங்களை நாடிவரப் போகிறது. பகைமாறும், பழிச்சொல்லும் அகலும். எதிரிகள் உதிரிகளாவர். நண்பர்களின் கூட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் மனக்கசப்பு மாறும். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வின் மூலம் வரவேண்டிய தொகை வந்து சேரும்.
கேது பலத்தால் பயணங்கள் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்ப முன்னேற்றம் கருதி குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். ராகு-கேதுக்களுக்குரிய வழிபாடும், குரு பிரீதியும் முறையாகச் செய்தால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியப் புள்ளிகளில் ஒருவராக நீங்கள் மாறவும் வழிபிறக்கும்.

Check Also

கனவுகளும் அதற்கான பலன்களும்

நாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு …